பட்ஜெட் கூட்டத்தொடர்; இரு அவைகளிலும் 31-ந்தேதி ஜனாதிபதி உரை
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனவரி 31-ந்தேதி உரையாற்ற இருக்கிறார்.;
புதுடெல்லி,
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 31-ந்தேதி தொடங்கும். பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடையும்.
2-வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனவரி 31-ந்தேதி உரையாற்றுவார். நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும்.
இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜனவரி 30-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் ஒன்றிற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.