கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரேலி ஹபீஸ்கஞ்ச் காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் நுக்தா பிரசாத் (வயது 38). இவர் தனது நண்பரான முனிஷ் சர்மா (40) மற்றும் ஜிதேந்திரா (32) இருவருடன் பரேலியில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய போது ரித்தோரா நகரத்திற்கு பைக்கில் 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
இதில் நுக்தா பிரசாத் பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது பெட்ரோல் பல்க் அருகே பைக்கின் முன்புரம் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கானது தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கண் இமைக்கும் நொடியில் வேகமாக தப்பிச் சென்றார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நுக்தா பிரசாத், முனிஷ் சர்மா மற்றும் ஜிதேந்திரா மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பிச் சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.