சத்தீஷ்காரில் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
சத்தீஷ்காரில் லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;
ஜாஷ்பூர்,
சத்தீஷ்காரின் ஜாஷ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கடங்கா கிராமத்தை சேர்ந்த 5 பேர் அருகில் உள்ள மனோரா கிராமத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அதை முடித்து காரில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
பட்ரடோலி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கிராமத்தினர் உதவியுடன் 5 பேரின் உடலையும் மீட்டனர். மேலும் விபத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.