விஜய் பொதுக்கூட்டம்: புதுவையில் ஒரு பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை
விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி,
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ள பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நாளை காலை 8 மணிக்கு காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார்.
அதன்பின் காலை 10.30 மணி அளவில் ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய், அவரது பிரசார வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்தவுடன் அவர் மீண்டும் காரில் சென்னை திரும்புகிறார். விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
உப்பளம் சாலையில் இருந்து கூட்டம் நடைபெறும் பாதையின் இருபுறம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி தகரங்களால் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்கள் அத்துமீறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
விஜய் பொதுக்கூட்டத்துக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கட்சி சார்பில் பாஸ் வழங்கப்படுகிறது. அவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடக்கும் உப்பளம் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.