டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
நாடு முழுவதும் மேற்படி கைது நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்தது.;
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதியை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடியை பறித்துக்கொண்டனர். இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் மேற்படி கைது நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து இருந்தது.
குறிப்பாக, கோர்ட்டுகளின் பெயர், முத்திரை மற்றும் நீதித்துறை உத்தரவுகளை மோசடியாகப் பயன்படுத்துவதும், குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதும் மிகவும் கவலைக்குரிய விஷயம் என கூறினர். பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. பதிலளிக்க அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன்பு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.