வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த சீனா

புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.;

Update:2025-07-03 06:44 IST

தர்மசாலா,

இந்தியாவின் அண்டை நாடான திபெத். 1959-ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார்.

அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. தற்போது மத தலைவராக இருப்பவர் 14-வது தலாய்லாமா. இவர் இந்த மாதம் வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் தனது வாரிசு அதாவது அடுத்த தலாய் லாமா குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதன்படி தனது வாரிசை அதாவது தலாய் லாமாவின் மறுபிறவியை தனது 'காடன் போட்ராங்' அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் எனவும், தனக்குப்பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த பதிவில் உறுதிபட தெரிவித்து உள்ளார். இதன் மூலம் அடுத்த தலாய்லாமா குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தலாய் லாமாவின் இந்த அறிவிப்பை சீனா நிராகரித்து உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், 'தலாய் லாமாவின் மறுபிறவியை அங்கீகரிப்பதில், மத மரபுகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு அங்கீகாரம், 'தங்க கலசம்' செயல்முறை மற்றும் மத்திய அரசின் (சீனா) ஒப்புதல் ஆகியவற்றின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்