‘ராகிங்’ கொடுமையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவி அஞ்சலி தன்னுடன் படிக்கும் சக மாணவி உள்பட 3 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;
பாகல்கோட்டை,
கேரள மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் குலேடகுடா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 4-வது செமஸ்டர் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சலி திடீரென்று வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, அஞ்சலி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் கதறி அழுதனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் குலேடகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், தற்கொலை செய்துகொண்ட அஞ்சலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலேடகுடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அஞ்சலி தற்கொலை செய்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், அவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றிக் கொண்டனர். அந்த கடிதத்தில் அஞ்சலி தன்னுடன் படிக்கும் சக மாணவி உள்பட 3 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
எனது மரணத்திற்கு இந்த 3 பேரும் தான் காரணம். அவர்கள் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்கள் வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்கள் தான். அவர்கள் என்னை ராகிங் செய்ததுடன், மனரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடையச் செய்து என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியவர்கள்.அவர்கள் அனைவரும் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களை சும்மா விடக் கூடாது. அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறி அஞ்சலி தனது கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஞ்சலிக்கு ராக்கிங் கொடுமை செய்த சக மாணவி வர்ஷா, மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ராக்கிங் கொடுமையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.