கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காதல் விவகாரமா? - போலீசார் விசாரணை
பாகூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
புதுச்சேரியை அடுத்த பாகூர் அடுத்த சின்ன கரையாம்புத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (48 வயது). இவர் திருப்பூரில் உள்ள தையல் கடையில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மீராபாய். இவர்களுக்கு புவனேஸ்வரராஜ் (20 வயது) என்ற மகனும், இலக்கியா (19 வயது) என்ற மகளும் உள்ளனர். இலக்கியா கதிர்காமம் அரசு கலைக்கல்லூரியில் புள்ளியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு டியூஷன் படிக்கும்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபரை இலக்கியா காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊரான சின்ன கரையாம்புத்தூருக்கு இலக்கியாவை அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இலக்கியா மட்டும் தனியாக இருந்தார். அப்போது முருகானந்தம் மகள் இலக்கியாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அருகில் வசிக்கும் மாமியாரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது இலக்கியா மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரையாம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினையால் இலக்கியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.