தேசிய மற்றும் குடிமக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் - பிரதமர் மோடி
காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நவி மும்பையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசியதாவது:-
நவி மும்பை விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க வசதியாக நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவையும் கொண்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை.
மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றாகும். பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கியதற்கு இதுவே காரணம்.காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. மத்திய உள்துறை மந்திரியாக இருந்த ஒரு காங்கிரஸ் தலைவர், 2008 இல் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் இராணுவ பதிலடியை ஒரு நாடு தடுத்தது என்று கூறியுள்ளார். கட்சி அதனை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையமாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் இலக்கு. கடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் முதல் முறையாக வானில் பறந்து, தங்கள் கனவுகளை நனவாக்கியுள்ளனர். 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது 160 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.