கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு

ராகுல் காந்தியின் வாகனத்திற்கு முன்பு அந்த கான்ஸ்டபிள் தவறி விழுந்து விட்டார் என நவாடா போலீஸ் சூப்பிரெண்டு கூறினார்.;

Update:2025-08-21 17:46 IST

நவாடா,

பீகாரில், வாக்காளருக்கு அதிகாரம் அளிக்கும் யாத்திரை என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை, சசராம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை (17-ந்தேதி) தொடங்கியது. பாதயாத்திரை மற்றும் வாகனங்களில் என பல்வேறு வழிகளில் இந்த யாத்திரை நடைபெறும்.

இதன் ஒரு பகுதியாக, நவாடா மாவட்டத்தில் பகத்சிங் சவுக் பகுதியில் ராகுல் காந்தியின் வாகனம் கடந்த 19-ந்தேதி சென்றது. அப்போது, அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென அந்த வாகனத்தின் முன்பு விழுந்துள்ளார். இதில், அந்த வாகனம் அவருடைய கால் மீது ஏறி சென்றது. இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த கான்ஸ்டபிள் வலியால் அலறினார். அவரை உடனடியாக ஜீப்புக்கு கொண்டு வரும்படி, தன்னுடைய ஆதரவாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகிறார். அவருக்கு குடிக்க தண்ணீர் பாட்டிலை கொடுத்து, ஜீப்பில் வந்து அமரும்படி கூறினார். எனினும், அந்த கான்ஸ்டபிள் எழுந்து கஷ்டப்பட்டு நடந்து சென்றார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை நவாடா போலீஸ் சூப்பிரெண்டு அபினவ் திமான் செய்தியாளர்களிடம் இன்று கூறியதுடன், பிற விவரங்கள் தேவைப்படும் நேரத்தில் வெளியிடப்படும் என்று கூறினார்.

அவர் இதற்கு முன்பு கூறும்போது, ராகுல் காந்தியின் வாகனத்திற்கு முன்பு அந்த கான்ஸ்டபிள் தவறி விழுந்து விட்டார் என கூறினார். அப்போது அது அவருடைய காலில் உரசி விட்டது. இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டது என கூறினார். ஆனால், கான்ஸ்டபிளை வாகனம் நசுக்கியது என கூறி பா.ஜ.க. வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்