நள்ளிரவில் கரையை கடந்தது 'ராமெல்' புயல் - மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம்

தீவிர புயலாக வலுவடைந்த 'ராமெல்' புயல் வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது.

Update: 2024-05-27 01:16 GMT

புதுடெல்லி,

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'ராமெல்' புயலாக மாறி வலுப்பெற்றது. இது, தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று வங்க தேசம் - கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் - சாகர் தீவிற்கும் இடையே, வங்கதேசம்-மோங்லாவுக்கு அருகில் நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

இந்த சூழலில், புயல் காரணமாக, கடலில் சீற்றம் காணப்படும். இதனால், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிக்கும், வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தீவிர புயலாக வலுவடைந்த 'ராமெல்' புயல் இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. கடந்த ஆறு மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மோங்லா என்னும் பகுதியில் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசியது. தீவிர புயலானது இன்று காலைக்குள் படிப்படியாக வலுவிழந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ராமெல்' புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்