டெல்லி கார் வெடிப்பு; ஈரான் மீண்டும் கடுமையான கண்டனம் - நன்றி தெரிவித்த இந்தியா
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் ஈரான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அவருடைய டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் காரை ஓட்டி வந்தது உமர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், அல்-பலா பல்கலைக்கழகத்தின் பயிற்சி டாக்டர்களான டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முசாமில் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத கார் வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் இந்திய அரசுக்கு ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம். இந்த சோக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் ஈரான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது.
கடந்த 10-ந்தேதி ஈரான், வெளியிட்ட அறிக்கையில், வருத்தம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, மீண்டும் அறிக்கை வழியே வருத்தம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்திற்கு, அர்ஜென்டினாவும் கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதற்கு இந்தியா தரப்பில் பதிலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி கார் வெடிப்பு துயர சம்பவத்தின் தொடர்ச்சியாக இரங்கல் செய்தி வெளியிட்டதற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் மற்றும் எங்கள் அனைவருக்கும் ஆறுதல் ஏற்படுத்தும் என தெரிவித்து கொண்டது.