டெல்லி கார் வெடிப்பு; சுங்க சாவடியில் உமர் கட்டணம் செலுத்தும் சி.சி.டி.வி. பதிவு வெளியீடு
ரெட் ஈகோஸ்போர்ட் காரை பரீதாபாத் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.;
புதுடெல்லி,
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. உமர் கட்டணம் செலுத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. அவர் பதர்பூர் எல்லை வழியே ஐ20 காரில் வருகிறார்.
சுங்க சாவடியில் காரை நிறுத்தி, பணம் எடுத்து, சுங்க சாவடி ஊழியரிடம் கொடுக்கிறார். அவர் முக கவசம் அணிந்தபடி உள்ளார். வீடியோவில் உமரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவருடைய அடையாளம் உறுதியாகி உள்ளது. காரின் பின் சீட்டில் பெரிய பை ஒன்றும் உள்ளது.
உமர் பணம் கொடுக்கும்போது, அடிக்கடி சி.சி.டி.வி. கேமராவை பார்ப்பதும், கண்காணிக்கப்படுகிறோமா என எச்சரிக்கையாக இருப்பதும் தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பல்வேறு அமைப்புகளும் அவரை தேடி வருகின்றன என அவர் கவனத்துடனேயே இருப்பது தெரிகிறது. உமரின் வாகனம் குறித்து வேறு எந்த சான்றாவது கிடைக்கும் வாய்ப்பு பற்றி அதிகாரிகள் முழு அளவில் விசாரித்து வருகின்றனர். எவரேனும் அவரை காருடன் பார்த்துள்ளனரா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உமருடன் பிரெஸ்ஸா ரக கார் மற்றும் ரெட் ஈகோஸ்போர்ட் காரும் காணாமல் போயுள்ளன. எனினும், ரெட் ஈகோஸ்போர்ட் காரை பரீதாபாத் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது.
சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. கார் பாகங்களும், மனித உடல்களும் பரவி கிடந்தன.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.