டெல்லி: குடியரசு தின எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம்

உளவு அமைப்புகளிடம் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தகவல்கள் வந்துள்ளன.;

Update:2026-01-22 09:10 IST

புதுடெல்லி,

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று உள்ளது. டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் என்ற அந்த நபர் இந்திய துணை கண்டத்தில் அமைந்த அல்-கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி என்றும் டெல்லி போலீசார் மற்றும் உளவு அமைப்புகளால் தேடப்படும் பயங்கரவாதி என்றும் தெரிவித்து உள்ளனர்.

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி போலீசார் தரப்பில், தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களும் விரிவான அளவில் பயன்படுத்தப்படும்.

உளவு அமைப்புகளிடம் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தகவல்கள் வந்துள்ளன. இதனை முன்னிட்டு, கடமை பாதை மற்றும் ஒட்டுமொத்த டெல்லி மாவட்டம் முழுவதும் இந்த விரிவான பாதுகாப்பு அமலில் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்