நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

இந்திரா காந்தி அமைதி விருது மொசாம்பிக் நாட்டு சமூக ஆர்வலரான கிரகா மச்செல்லுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2026-01-22 09:08 IST

புதுடெல்லி,

2025-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, மொசாம்பிக் நாட்டு சமூக ஆர்வலரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான கிரகா மச்செல்லுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப்பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டதாகும்.

இந்நிலையில் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானியான கிரகா மச்செல்லின் வாழ்நாள் முழுவதும் தன்னாட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வேரூன்றியுள்ளதாக இந்திரா காந்தி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

குறிப்பாக அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்ததாகவும் கூறியுள்ளது. கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து நெல்சன் மண்டேலாவை கிரகா திருமணம் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்