சிக்கிய டைரியில் தேதி, மாதம், குறியீட்டு வார்த்தைகள்... டெல்லி கார் வெடிப்பில் தீவிரமடையும் விசாரணை

இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கைப்பற்றி உள்ள டைரிகளில் 25 தனிநபர்களின் பெயர்கள் உள்ளன.;

Update:2025-11-13 21:32 IST

பரீதாபாத்,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அவருடைய டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் காரை ஓட்டி வந்தது உமர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில், டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முசாமில் ஆகியோரின் 2 டைரிகளை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கைப்பற்றி உள்ளன. அவர்கள் இருவரும் வேலை பார்த்த பல்கலைக்கழகத்தின் 17-வது கட்டிடத்தில், அறை எண் 13-ல் 2 டைரிகள் கிடைத்துள்ளன. டாக்டர் முசாமில் அந்த அறையில் இருந்துள்ளார்.

அதில், நவம்பர் 8 முதல் 12 வரையிலான தேதி குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது சுட்டி காட்டப்பட்டு உள்ளது. டைரிகளில் 25 தனிநபர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் காஷ்மீர் மற்றும் பரீதாபாத் நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்த டைரிகளில் குறியீட்டு வார்த்தைகள் மற்றும் என்கிரிப்டட் செய்திகளும் காணப்படுகின்றன. அதில் ஆபரேசன் என்ற வார்த்தை பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்