சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து பணம் மோசடி
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான போலி இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.;
திருவனந்தபுரம்,
சபரிமலை கோவிலில் அய்யப்ப பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஏராளமான அறைகள் உள்ளன. இவை அனைத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது போல், சபரிமலையில் ஓய்வெடுக்க அறைகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், சபரிமலையில் அறைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருந்ததை பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் முன்பதிவு செய்து ஏமாற்றம் அடைந்ததும் தெரியவந்தது. இணையதளம் போலியானது என்பதை அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் பணத்தை அபகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த போலி இணையதளத்தை (sannidanamguesthouse.in) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அரியானாவைச் சேர்ந்த ஹமீது என்பவருடைய செல்போன் எண் ஒன்றும், மற்றொரு எண் யாருடையது என்பதையும் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்து வருகின்றனர். மேலும், போலி வலைத்தளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.