ஐதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது
துபாயிலிருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.;
கோப்புப்படம்
கேரளாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஐ.டி. ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் துபாயிலிருந்து ஐதரபாத் சென்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானப் பணிப்பெண் சேவைகளை வழங்கும்போது, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் தரையிறங்கிய பிறகு, கேப்டன் மற்றும் குழுவினருக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது இருக்கையில் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து விமான ஊழியர்கள் அவரது இருக்கையில் சென்று தேடினர். அப்போது அங்கு ஒரு குறிப்பு கிடைத்தது. அதில் விமானப் பணியாளர்களை குறிவைத்து ஆபாசமாக மற்றும் தவறாக அவர் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார் உள்ளூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டார்.