மிசோரமில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - 8 பேர் கைது
மியான்மரில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.;
ஐசால்,
மிசோரம் மாநில கலால் மற்றும் போதைப்பொருள் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்(NCB) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை(BSF) ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து, கீபாங் மற்றும் செலிங் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, இரண்டு லாரிகளின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் 49 கிலோ மெத்தம்பட்டமைன் மற்றும் 36 கிராம் ஹெராயின் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.75 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருட்கள் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டிக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.