பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்... மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு

12 விடுப்புகளை மாதத்திற்கு ஒரு நாள் என்றோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்து விடுப்புகளையோ பெண் பணியாளர்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது;

Update:2025-10-09 18:54 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கை, 2025 என்ற கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது. இதுபற்றி கர்நாடக மத்திய அமைச்சரவை இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது.

இதில் பல முக்கிய துறைகளின் செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில், மாதவிடாய் விடுப்பு கொள்கை, 2025-க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி எச்.கே. பாட்டீல் செய்தியாளர்களிடம் இன்று கூறினார். இவற்றுடன், தொழிலாளர் துறை, உட்கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி, கல்வி, சமூக நலன் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கான பல்வேறு பெரிய முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2024-ம் ஆண்டு, ஆண்டொன்றுக்கு 6 நாட்கள் விடுப்புக்கான செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. இந்நிலையில், ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட உள்ளது.

இதன்படி, ஓராண்டுக்கு அனுமதிக்கப்பட்ட 12 விடுப்புகளை மாதத்திற்கு ஒரு நாள் என்றோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்து விடுப்புகளையோ பெண் பணியாளர்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என கர்நாடக தொழிலாளர் துறை மந்திரி சந்தோஷ் லாட் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்