சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

சைபர் குற்றங்களில் ஈடுபட்டு 100 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்;

Update:2025-10-11 13:32 IST

காந்தி நகர்,

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் கைது, ஆன்லைன் டிரேடிங் மோசடி, பார்எக்ஸ் ஆன்லைன் டிரேடிங் மோசடி, அமலாக்கத்துறை பெயரில் போலி வழக்கு, கைது நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு பெயரில் போலி வழக்கு, கைது நடவடிக்கை எடுக்க உத்தரவு என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர். டிஜிட்டல் கைது, பார்எக்ஸ் டிரேடிங் மோசடி, அமலாக்கத்துறை பெயரில் சம்மன் அனுப்பி மிரட்டி மோசடி உள்பட பல்வேறு டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த முக்பல் அப்துல் அமகது, அவரது மகன் காசிப் முக்பால் டாக்டர் கூட்டாளிகளான மகேஷ் முப்தல் தேசி, ஓம் ராஜேந்திரா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு 100 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். மேலும், ஹவாலா உள்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கை மூலம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்