உறுதிமொழிப் பத்திரம் கேட்ட தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி பதிலடி
தேர்தல் கமிஷன் பாஜகவுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை நேற்று தெரிவித்து இருந்தார்.;
புதுடெல்லி,
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது மற்றும் தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள, உறுதிமொழி பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, "நான் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: "தரவுகளை உறுதிமொழி பிரமாணமாக அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. நான் அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன். நான் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தை முடக்கியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மாநில தேர்தல் ஆணைய அலுவலகங்களின் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. தரவுகளின் அடிப்படையில் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினால், அவர்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் குலைந்து போகும் என்பது அவர்களுக்குத் தெரியும்." இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி கூறியதாவது:
2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் 9-ல் மட்டுமே வெற்றி பெற்றோம்.எனவே இந்த எதிர்பாரா தோல்வி குறித்து ஆராய தொடங்கினோம். இதற்காக பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து ஆய்வு செய்தோம்.பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6,26,208 வாக்குகளை பெற்று இருந்தது.
பா.ஜனதா 6,58,915 வாக்குகள் பெற்று 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த நாடாளுமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 7 சட்டசபை தொகுதியில் 6-ல் காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது. ஆனால் மகாதேவ்புரா சடடசபை தொகுதியில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இதுவே பா.ஜனதா வெற்றிக்கு காரணம்.
எனவே இது குறித்து ஆய்வு செய்தபோதுதான் சுமார் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 வாக்காளர்கள் கொடுத்திருந்த முகவரிகள் போலி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.10,452 பேர் ஒரே முகவரியில் வசிப்பதாக கூறப்பட்டு உள்ளது. 4,132 பேரின் புகைப்படங்கள் போலியானவை. 33,692 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
இவை அனைத்தும் தேர்தல் கமிஷன் வழங்கிய தரவுகளில் இருந்து ஆய்வு செய்து கிடைத்த தகவல்கள். ஆனால் தேர்தல் கமிஷனோ நியாயமான, நேர்மையான தேர்தல் நடந்ததாக கூறுகிறது.ஒரு சட்டசபை தொகுதியிலேயே 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுதான் உங்கள் எதிர்காலம் என நாட்டு மக்களுக்கு கூற விரும்புகிறோம். ஒட்டுமொத்த அமைப்பும் திருடப்பட்டு இருககிறது.நாட்டில் மிகப்பெரிய குற்றவியல் மோசடி நடந்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும்.
இது தேர்தல் கமிஷனாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியாலும் செய்யப்படுகிறது. அதற்கான சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரத்தை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.இதுபோன்ற மோசடிகள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது அரசியல் சாசனம் மற்றும் இந்திய தேசியக்கொடிக்கு எதிரான குற்றம் ஆகும்.கடந்த 10-15 ஆண்டுகளுக்கான வாக்காளர் பட்டியலின் எலக்ட்ரானிக் வடிவம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தேர்தல் கமிஷன் வழங்காவிட்டால், அவர்களும் இந்த குற்றத்தில் பங்கு பெறுகிறார்கள்.
எலக்ட்ரானிக் வடிவில் வாக்காளர் பட்டியலை வழங்காதது மற்றும் சட்டத்தை மாற்றி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்க்க அனுமதிக்காதது ஆகியவற்றால் வாக்குகளை திருடுவதற்காக பா.ஜனதாவுடன் தேர்தல் கமிஷன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தியது.அத்துடன் நாடு முழுவதும் வாக்கு திருட்டுக்கான ஆதாரங்களையும் தேர்தல் கமிஷன் அழிக்கப் பார்க்கிறது. இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டும். ஏனெனில் நாம் மிகவும் நேசிக்கும் ஜனநாயகம் காணாமல் போய்விட்டது.
இந்த தேர்தல் மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அது முதுநிலையோ இளநிலை அதிகாரியோ யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஒருநாள் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது நாங்கள் உங்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை அறிவீர்கள்.பிரதமர் மோடி மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார். அவர் ஆட்சியில் நீடிக்க 25 இடங்களை மட்டுமே திருட வேண்டியிருந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பா.ஜனதா வென்றது.நமது அரசியலமைப்பின் அடித்தளம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது.தேர்தல்களை நாம் பார்க்கும்போது இந்த அடிப்படை அம்சம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பதுதான் விஷயம். சரியான நபர்கள்தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளார்களா? வாக்காளர் பட்டியல் உண்மையானதா இல்லையா? சில காலமாகவே மக்களிடையே சந்தேகம் இருந்து வருகிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலை ஒவ்வொரு கட்சியையும் பாதிக்கும். ஆனால் ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான மனநிலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி பா.ஜனதா மட்டுமே.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.