நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்த பெண் அதிகாரி
நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியுமென அதிகாரி கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் நந்தினி. நேற்று முன்தினம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து, வேளாண் துறை இணைந்து ஹோலாலு கிராமத்தில் நவீன எந்திரம் மூலம் நாற்று நடுவது தொடர்பாக பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி நந்தினி கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், சேற்று வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நாற்று நட்டார். பின்னர் அவர் பேசுகையில்,
“பெண்கள் நெல் நடவு எந்திரங்களை பயன்படுத்த முடியாது, எந்திரங்களை பராமரிக்க முடியாது என்ற எண்ணத்தை போக்க, நானே வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்தேன். சமீபகாலமாக நெல் நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதன்காரணமாக சரியான நேரத்தில் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இனிமேல் விவசாய கூலி தொழிலாளர்களை நம்பி விவசாயிகள் இருக்க வேண்டாம். நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.