சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 கோடி சுருட்டிய பெண் சாமியார்

பெண் சாமியாரின் பேச்சை கேட்டு இவ்வளவு பெரிய தொகையை இழந்த பிறகும், அவரது மகள்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை.;

Update:2025-11-08 10:39 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தீபக் தோலாஸ். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் மகள்கள் இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் அவருக்கு நாசிக்கை சேர்ந்த வேதிகா என்ற பெண் சாமியாரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தன்னிடம் உள்ள தெய்வீக சக்தியால் உங்களது மகள்கள் 2 பேரையும் குணப்படுத்தி விடுவதாக கூறினார்.

அதன்படி சிறப்பு பூஜை நடத்தி என்ஜினீயரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.14 கோடி அளவில் கறந்தார். இவ்வளவு பெரிய தொகையை அவர் தான் இங்கிலாந்தில் வேலை பார்த்தபோது, அங்கு வாங்கிய வீடு மற்றும் சொந்த கிராமத்தில் உள்ள நிலம் ஆகியவற்றை விற்று கொடுத்துள்ளார். அந்த சொத்துகளை விற்க பெண் சாமியார் வேதிகா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertising
Advertising

பெண் சாமியாரின் பேச்சை கேட்டு இவ்வளவு பெரிய தொகையை இழந்த பிறகும், அவரது மகள்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை. இதுபற்றி பெண் சாமியாரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்தார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை என்ஜினீயர் உணர்ந்தார்.

இதுபற்றி அவர் புனே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து கோத்ரூட் பொருளாதார குற்றப்பரிவு போலீசார் விசாரிக்க புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெண் சாமியார் வேதிகா மற்றும் அவரது கூட்டாளிகள் தீபக் கட்கே, குணால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்