பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகள் - இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு

ஏ.ஹியூ. கானின் சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச கவனத்தில் எடுத்துச் சென்று வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.;

Update:2025-11-08 08:44 IST

புதுடெல்லி,

அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார். அப்போது, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் தொடர்ந்து ரகசியமாக அணுசக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் மற்றும் அந்த நாட்டின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் ஏ.ஹியூ. கானின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா தொடர்ந்து சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் சென்று வருவதாக தெரிவித்தார்.

Advertising
Advertising

இது குறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தான் வரலாற்றில் ரகசியமான மற்றும் சட்ட விரோத அணு ஆயுத நடவடிக்கைகளை எப்போதும் அந்த நாடு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது பல தசாப்தங்களாக கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு மீறல்கள், ரகசிய கூட்டாண்மைகள், ஏ.ஹியூ. கான் நெட்வொர்க் மற்றும் மேலும் பெருக்கத்தை மையமாகக் கொண்டது.

பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கை தொடர்பாக இந்தியா எப்போதும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பின்னணியில் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை தொடர்பான ஜனாதிபதி டிரம்பின் கருத்துகளை நாங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு மறைந்த ஏ.ஹியூ. கான், அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான சர்வதேச நெட்வொர்க்கை அமைத்ததில் முக்கியமானவர் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். மேலும் சர்வதேச கறுப்புச் சந்தையுடன் தொடர்புடையவர் என்றும், வட கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்க உதவியதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்