அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி - ஷேக் ஹசீனா
வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.;
புதுடெல்லி,
வங்காள தேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (வயது 72). கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது அங்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் சுமூக உறவை கடைபிடித்து வந்த வங்காள தேசம், தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சியின் போது, அதற்கு நேர் எதிரான கொள்கையை பின்பற்றி வருகிறது. இதனால், இந்தியா - வங்காள தேசம் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தது தான், இந்தியா - வங்காள தேச உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் என்று முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், வங்காள தேச இடைக்கால அரசின் குற்றச்சாட்டுக்கு ஷேக் ஹசீனா கூறியதாவது:-
இந்தியா எப்போதும் வங்காள தேசத்தின் நெருங்கிய நட்பு நாடு தான். வங்காள தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். இந்தியா - வங்காள தேசம்இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு நான் காரணமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசின் வன்முறை மற்றும் பயங்கரவாத கொள்கைகளுமே காரணம்.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், சட்ட ரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் வங்காள தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களின் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களும் தான் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கிற்கு காரணம். இருநாடுகளிடையேயான உறவு மிகவும் ஆழமானது. இந்தியா எங்களின் உண்மையான நட்பு நாடு என்பதில் பெருமை கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால், இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
மேலும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்தாண்டு நடைபெறவுள்ள வங்காள தேச பொதுத் தேர்தலில் தனது அவாமி லீக் கட்சி நிச்சயமாகப் போட்டியிடும்
இவ்வாறு அவர் கூறினார்.