பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மூச்சுத்திணறி பலி

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் உடலில் தீக்காயங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.;

Update:2026-01-05 00:47 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தவர் சர்மிளா(வயது 34). இவரது சொந்த ஊர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ஆகும். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழியுடன் சர்மிளா வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு சர்மிளாவின் தோழி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் சர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சர்மிளா வசித்த குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவி எரிந்தது.

மேலும் கரும்புகையும் வெளியேறியது. உடனே சர்மிளா தீயை அணைக்க முயன்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அவரால் தீயை அணைக்க முடியாமலும், வீட்டுக்கதவை திறக்க முடியாமலும் போனது. இதற்கிடையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சர்மிளாவை காப்பாற்ற முயன்றனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டுக்குள் சர்மிளா பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசாரும் விரைந்து வந்து சர்மிளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் தீக்காயங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் தீ விபத்தில் வீடு முழுவதும் புகை மண்டலமானதால் மூச்சுத்திணறி சர்மிளா உயிரிழந்து விட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்