ஆசை வார்த்தை கூறி 4 ஆண்டுகளாக உல்லாசம்; 17 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு: உறவினர் அதிர்ச்சி
சசூன் அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என கூறியுள்ளார்.;
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அவருடைய தூரத்து உறவினர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி 4 ஆண்டுகளாக பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சசூன் அரசு பொது மருத்துவமனையில் சிறுமிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுபற்றி சமர்த் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை மோசம் செய்த அந்த நபர் கர்நாடகாவுக்கு தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் பற்றி மூத்த காவல் ஆய்வாளர் உத்தம் கித்தே கூறும்போது, சிறுமியின் உறவினரை தேடி வருகிறோம். அவர் கைது செய்யப்பட்டவுடன் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுவார். சிறுமிக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, புனே மாவட்டத்தின் காத்கி பகுதியில் தாயாருடன் சிறுமி வசித்து வந்திருக்கிறார். சிறுமியின் தாயார் வீட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார். அதில் வந்த சொற்ப ஊதியம் கொண்டு மகளை படிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு தொலைபேசி வழியே அந்த நபர் சிறுமியை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது சிறுமிக்கு வயது 14. தினமும் பேசியதில், சிறுமியை கவர்ந்திருக்கிறார். சிறுமி மீது அன்பு காட்டுவது போன்று நடித்திருக்கிறார். இதனை சிறுமியும் உண்மை என நம்பியிருக்கிறார்.
இதன்பின்னர், கர்நாடகாவில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கிறார். இதுபோன்று பலமுறை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். 4 ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்று நடந்துள்ளது. இந்த நிலையில், அந்த சிறுமி சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக, காத்கி காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.
அவர் தேடி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். அப்போது சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சசூன் அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என கூறியுள்ளார்.
அப்போது சிறுமி அவருடைய தாயாரிடம், தூரத்து உறவினர் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டார் என கூறியுள்ளார். இதுபற்றி அறிந்த அந்த உறவினர் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனினும், போலீசில் சிக்காமல் வேறு பகுதிக்கு தப்பியோடி விட்டார். இதனை தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.