உ.பி.யை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்

செய்திகளை புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யும் திறனை வளர்ப்பதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-03 17:59 IST

சென்னை,

உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் மாணவ, மாணவிகள் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. செய்தித்தாள் வாசிப்பு மூலம் மாணவர்களின் பொது அறிவு அதிகரிப்பதுடன், வாசிப்பு திறனும் அதிகரிக்கும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

அதன்படி, பள்ளிகளில் தினமும் காலை பிரார்த்தனை நிறைவடைந்தவுடன் மாணவர்கள் 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செய்தித்தாள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும். அதில் உள்ள இந்தியா, உலகம், விளையாட்டு போன்ற செய்திகளை மாணவர்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்கும், செய்திகளை புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யும் திறனை வளர்ப்பதற்கும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவுப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழிப்பள்ளிகள் குறைந்தபட்சம் இரண்டு செய்தித்தாள்களை(ஒரு இந்தி மற்றும் ஒரு ஆங்கிலம்) வாங்க வேண்டும் என்றும், அரசு நடுநிலைப் பள்ளிகள் குறைந்தது இரண்டு இந்தி செய்தித்தாள்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்தித்தாளுக்கான செலவை ராஜஸ்தான் பள்ளிக்கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்