மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்

துப்பாக்கிகளை வாங்க அவர் 3 முறை பீகார் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update:2026-01-04 05:43 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பாலமுருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த ஓராண்டாக புவனேஸ்வரி கணவரை பிரிந்து பெங்களூரு ராஜாஜி நகரில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டும் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந்தேதி வெஸ்ட் ஆப் கார்டு ரோட்டில் புவனேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் துப்பாக்கியால் புவனேஸ்வரியை சுட்டுக்கொன்றார்.

இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பாலமுருகன், மனைவி புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவரை விட்டு பிரிந்து சென்ற புவனேஸ்வரி விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற பாலமுருகன் மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக துப்பாக்கிகளை வாங்க அவர் 3 முறை பீகார் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 15 நாட்கள் அவர் பீகாரிலேயே தங்கியிருந்து துப்பாக்கியை எப்படி கையாளுவது என பயிற்சியும் எடுத்துள்ளார். அதன்பிறகே அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக அவர் சேலம் கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு கூலி கொடுத்து மனைவியை கொல்ல ஏற்பாடு செய்துள்ளார். இதனால் பாலமுருகன் தொடர்பு கொண்ட கூலிப்படையை சேர்ந்த நபரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்