மே. வங்கத்தில் பாஜவுக்கு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்கம் மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் மாநாட்டு திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; நம் நாடு இன்று விரைவான வளர்ச்சியை விரும்புகிறது. பீகார் மீண்டும் வளர்ச்சியை நோக்கி செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு மாபெரும் வாய்ப்பை மக்கள் வழங்கி உள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. பீகார் மக்கள் காட்டாட்சியை நிராகரித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பிறகும், அவர்கள் பாஜ- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தலில் முன்பு இருந்ததை விட அதிக இடங்களை அளித்து உள்ளனர்.
இப்போது நாம் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்ஐஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர். அந்த கட்சி என்னையும், பாஜவையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது” என்றார். முன்னதாக மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தி தரையிறங்காமல் கொல்கத்தாவிற்கே திரும்பி சென்றது.