தங்க கடத்தல் வழக்கு: நடிகையை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.;

Update:2025-03-07 17:29 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (32). கன்னட மொழியில் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கிச்சா சுதீப் நடித்த 'மாணிக்யா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் 2016-ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த நடிகை ரன்யா ராவ், தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து, 14.2 கிலோ தங்க கட்டிகள், மற்றும் 2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த மனு, பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ரன்யா ராவ் கடந்த 2 மாதங்களில் 27 முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார் எனவும், இதன் பின்னணி குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி, ஜாமீன் மனுவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதே சமயம், ரன்யா ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை ஒத்திவைப்பதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்