நடிகர் தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
மனு மீதான இறுதி கட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு நடந்தது.;
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மனு மீதான இறுதி கட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த், இது திட்டமிட்டு நடந்த கொலை, எனவே 7 பேரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அதற்கு பவித்ரா கவுடாவின் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, நடிகர் தர்ஷன் மற்ற 5 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டார்கள். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த மனு மீது அவசர கதியில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் குற்றவாளிகள் சார்பில் 3 பக்க எழுத்து பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிறகு இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தற்போது நடிகர் தர்ஷன், 'டெவில்' படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். கோர்ட்டு அனுமதியுடன் அங்கு சென்றுள்ள அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவுக்கு திரும்ப இருக்கிறார்.