இந்தியா போரை அறிவிக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.;

Update:2025-04-29 05:14 IST

மும்பை,

காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் வசம் உள்ளவரை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரத்தான் செய்யும். பயங்கரவாதிகள் மீண்டும், மீண்டும் ஒரே வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். இதனால் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லையென்றால், அவர்களுக்கு எதிராக நாம் போரை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தான் அந்தப்பகுதியை விட்டு வெளியேறவில்லை எனில், இந்தியா போர் புரிய தயங்காது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது என்று நான் எச்சரிக்கிறேன். இதற்கு எதிர்க்கட்சிகளும் எங்களுடன் துணை நிற்க வேண்டும். தேவைப்படும்போது தேசத்துடன் நிற்க வேண்டும் என்பது அம்பேத்கர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு செல்ல தொடங்கினர். காஷ்மீர் தேர்தலில் வாக்குப்பதிவு 60 சதவீதமாக அதிகரித்தது. பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. முஸ்லிம்களும், காஷ்மீர் மக்களும் தேசத்துடன் உள்ளனர்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்