சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு; மு.க.ஸ்டாலினை அழைத்த கேரள அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்
வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநில அரசின் தேவசம்போர்டு மந்திரி வி.என்.வாசவன் நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு(TDB) மற்றும் கேரள மாநில அரசு சார்பில் வரும் செப்டம்பர் 20-ந்தேதி பம்பாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு அருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
முன்னதாக இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.என்.வாசன், கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த நிகழ்விற்கு அனைத்து அண்டை மாநிலங்களின் அரசுகளுக்கும், அதிக அளவிலான ஐயப்ப பக்தர்களை கொண்டிருக்கும் மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்த கேரள அரசுக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள பா.ஜ.க. மாநில தலைவர் சந்திரசேகர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆண்டுகளாக பினராயி விஜயன் சபரிமலை மரபுகளையும், பக்தர்களையும் அவதூறு செய்து, பலரை சிறையில் அடைத்தார். அதே சமயம் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்துக்களையும், இந்து நம்பிக்கையையும் அவதூறு செய்தனர்.
இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஐயப்பனைத் ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் செய்யப்படுகின்றன.
ஹிட்லர் யூதர்களைக் கொண்டாடுவது, ராகுல் காந்தி உண்மையைப் பேசுவது, ஒசாமா பின்லேடன் அமைதியின் தூதராக மாறுவது, ஹமாஸ்/ஜமாத் இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை மதிப்பது, காங்கிரஸ்/இந்தியா கூட்டணி கட்சிகள் வாரிசு அரசியலையும், ஊழலையும் கைவிடுவது எல்லாம் எப்படி உண்மைக்கு மாறானதோ, அதே போன்றதுதான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு செல்வது. ஆனால் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.