சர்வதேச மகளிர் தினம்: இந்திய ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது;
Image Source : PTI
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஆர்.பி.எப். (RPF) எனப்படும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் சவாலான சூழ்நிலைகளை விரைவாக சமாளிக்க உதவும் வகையில், அவர்களுக்கு மிளகாய் ஸ்ப்ரே கேன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியாகவோ அல்லது குழந்தைகளுடன் பயணிக்கும் பெண் பயணிகளைப் பாதுகாக்கும்போது, அவர்களின் பாதுகாப்பான ரெயில் பயணங்களை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மிளகாய் ஸ்ப்ரே கேன்களை வழங்குவதன் மூலம், பெண் ஆர்.பி.எப். (RPF) பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள். மேலும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், துன்புறுத்தல் சம்பவங்களை எளிதாகவும், அவசரநிலைகளை திறம்பட கையாளவும் உதவும் என்று இந்திய ரெயில்வே கூறியுள்ளது.