சுரேஷ் கோபி தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் முறைகேடா? காங்கிரஸ் குற்றச்சாட்டு

திருச்சூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.;

Update:2025-08-16 19:21 IST

திருச்சூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி முன்வைத்து இருக்கும் வாக்கு திருட்டு புகார் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக நாளை செய்தியாளர் சந்திப்பை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

இதற்கிடையே, கேரளாவின் ஒரே பாஜக எம்.பியான சுரேஷ் கோபியின் திரிச்சூர் தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரசாத், திருச்சூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

கடந்த ஆண்டு திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது, தொகுதியில் நிரந்தரமாக வசிக்காத பலர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதனை சரிபார்க்க வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறி விட்டனர்.

அவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்த நபர்கள், அங்கு நிரந்தரமாக வசிப்பவர்களா என்பதை கண்காணிக்கவில்லை. எனவே, வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக திருச்சூர் முன்னாள் எம்.பி. பிரதாபன் கலெக்டரிடம் புகார் அளித்து இருந்தார். அதில், திருச்சூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்காத நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளதாக கூறி இருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்