கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
பொதுமக்களை பாதுகாக்க தேசிய அளவில், ஒரு திட்டமிட்ட கொள்கையை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறினார்.;
திருவனந்தபுரம்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்து உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு மிக சோக மற்றும் வலியை ஏற்படுத்தும் சூழல். நம்முடைய நாட்டில் கூட்ட மேலாண்மையில் ஏதோ தவறு இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்றதொரு சம்பவம் காணப்படுகிறது. பெங்களூருவை நினைத்து பாருங்கள். கூட்ட நெரிசலில் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் என நாம் கேட்கும்போது, மனது உடைந்து போகிறது.
பொதுமக்களை பாதுகாக்க தேசிய அளவில், ஒரு திட்டமிட்ட கொள்கையை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதம் இருக்க வேண்டும். ஒரு திரைப்பட நட்சத்திரமோ, கிரிக்கெட் வீரரோ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என கேட்கும் ஆவலுடன், ஒரு மனவுறுதியுடன் மக்கள் செல்கின்றனர்.
அவர்கள் நமக்கும் நட்சத்திரங்கள்தான். ஆனால் அதுபோன்ற இடங்களில், குறிப்பிட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விசயம் ஆகும் என கூறினார்.
இதற்காக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் மிக கடுமையான நெறிமுறைகளை வகுக்க முன்வர வேண்டும் என நான் உண்மையாக கேட்டு கொள்கிறேன். அதனால், இதுபோன்ற கொடூர கூட்ட நெரிசல் ஏற்படாமல், தேவையற்ற பாதிப்புகளும் தவிர்க்கப்படும் என்று கூறினார்.