கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; தாமதமாக வர காரணம் என்ன? விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி
கரூர் வழக்கில் அடுத்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.;
புதுடெல்லி,
கரூரில் கடந்த செப். 27ஆம் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த ஜன. 12ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ முதல்முறையாக சம்மன் அனுப்பியது.அதைத்தொடர்ந்து விஜய் டெல்லியில் நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து, விசாரணைக்கு இன்று ஆஜராக விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ஏற்று விஜய் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
அப்போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அதாவது:
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்?
- எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்கள்?
- அனுமதிக்கப்பட்டதை விட கூட்டம் அதிகமாக வந்தது எப்படி?
- அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா?
- தண்ணீர் பாட்டிலை வீசிய போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?
- வாகனத்தில் ஏறி நின்ற போது கீழே நடப்பதை பார்க்கவில்லையா?
- கண் எதிரே கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?
- அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்?
என அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு, “தமிழக போலீசாரை முழுமையாக நம்பினேன். தமிழக போலீசார் வழிநடத்தலிலேயே சென்றேன்” என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் பதில் அளித்ததாகவும், சில கேள்விகளுக்கு அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. இதனால், விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேலும் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, கரூர் வழக்கில் அடுத்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் இடம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.