கேரளா: தண்டவாளத்தில் 5 இடங்களில் இரும்பு கம்பிகள் - ரெயிலை கவிழ்க்க சதியா?
ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்தது யார்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.;
கேரளா,
கேரள மாநிலம் பாலக்காடு-சொர்னூர் இடையே மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சொர்னூரில் இருந்து பாலக்காடு நோக்கி ஒற்றப்பாலம்-லக்கிடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை ரெயில் கடந்த போது, தண்டவாளத்தில் ஒருவித சத்தம் கேட்டு உள்ளது. இதனால் என்ஜின் டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவர் தண்டவாளத்தில் பார்த்த போது, அங்கு சுருள் வடிவிலான இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் ரெயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அவர், உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் ஒற்றப்பாலம்-லக்கிடி இடையே உள்ள தண்டவாளத்தில் குறிப்பிட்ட பகுதியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு 5 இடங்களில் அவை வைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக மாயன்னூர் பாலத்தின் அருகே இரும்பு கம்பிகள் கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதனை ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அகற்றினர்.
இதன் மூலம் ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்ற கோணத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்தது யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.