கேரளா: கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் புகைமூட்டம்; 4 பேர் பலி
சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.;
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 8 மணியளவில் யு.பி.எஸ். அறையில் மின்கசிவு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா (வயது 44) என்பவர் உயிரிழந்து உள்ளார் என உறுதிப்படுத்தினார்.
அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தபோது, புகைமூட்டம் அதிகரித்தது. இதனால், வேறு இடத்திற்கு அவரை கொண்டு செல்ல முயன்றபோது அவர் பலியானார்.
அந்த மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் பலரும், மருத்துவ உபகரணங்களுடன் வேறு பகுதிக்கு தூக்கி செல்லப்பட்டனர். இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என மருத்துவமனையின் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.