பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

ஓணம் உள்பட கேரளத்தின் பாரம்பரிய பண்டிகைகளைக்கூட பாஜக மாற்ற முயற்சிப்பதாக கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.;

Update:2025-09-11 19:31 IST

திருவனந்தபுரம்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளத்துக்கு வந்தபோது, கேரளத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகள் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், அமித்ஷாவின் இந்த கருத்தைக் குறிப்பிட்டு, 'பாஜகவின் முக்கிய இலக்கு கேரளம் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "அவர்கள் ஒரு அரசியல் கட்சி. அதனால் இயல்பாகவே கண்டிப்பாக முயற்சிப்பார்கள். ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாசாரத்தை அழித்து விடும். அந்த உணர்வு நம்மிடையே எப்போதும் இருக்க வேண்டும்.

நாம் கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகையான ஓணம் விழாவையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் அனுபவிக்கும் அனைத்தையும் மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். பாஜகவின் தாக்கங்களை மக்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பாஜகவினர் வாக்குகளைப் பெறும்போது என்ன செய்வார்கள் என்பதை உணர வேண்டும்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்