மதுபோதையில் தகராறு; ஆசிரியர் அடித்துக்கொலை
இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டம் புர்னபனி கிராமத்தை சேர்ந்தவர் முக்ரு தேவ்கம் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முக்ரு தேவ்கம் மேலும் சிலருடன் சேர்ந்து நேற்று இரவு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் மது குடித்துள்ளார். அப்போது தேவ்கமிற்கும் மதுபோதையில் இருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவகம்மை 3 பேர் மரக்கட்டை, கல் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முக்ரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து இன்று காலை கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், முக்ரு தேவ்கம்மின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.