வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.;
லக்னோ,
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்களில் சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இந்த பணி மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த சர்வேஷ் சிங் நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி அறையை திறந்து பார்த்தபோது சர்வேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சர்வேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, தற்கொலை செய்வதற்குமுன் சர்வேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தற்கொலை செய்வதற்குமுன் சர்வேஷ் சிங் எழுதி வைத்த கடிதத்தில், பகலிரவாக பணியாற்றபோதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.