சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த மாணவர்கள்: கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
மாணவர்கள் கல்லூரி உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளி பகுதியில் தனியார் ஜூனியர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படிக்கும் 3 மாணவர்கள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த 3 மாணவர்களும் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர், வாசலில் வைத்தே 3 மாணவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மாலையை கழற்றி விட்டு கல்லூரிக்குள் வரும்படி அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாலையை கழற்ற மறுத்த மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தங்கள் பெற்றோரிடமும், இந்து அமைப்பினரிடமும் மாணவர்கள் இந்த விஷயத்தை தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் செயலுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் கல்லூரிக்கு சென்ற நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அய்யப்பன் கோவிலுக்கு அணிந்த மாலையை கழற்றுமாறு கூற எந்த உரிமையும் இல்லை என்றும், எங்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து அமைப்பினரை சமாதானம் செய்த கல்லூரி நிர்வாகிகள், பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், மாலை அணிந்த மாணவர்கள் சீருடையும், துண்டும் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. ஆனால், துண்டை தோளில் போடாமல் இடுப்பில் கட்ட வேண்டும் என தெரிவித்தது. இதற்கு இந்து அமைப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.