மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூர தந்தை

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 3 குழந்தைகளை கோடரியால் தந்தை கொடூரமாக வெட்டினார். இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தன.;

Update:2025-09-26 04:23 IST

கர்நாடக மாநிலம் யாதகிரி (மாவட்டம்) தாலுகா சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஹேமந்த், பார்கவ் (3 வயது) 2 மகன்களும், சான்வி (5 வயது) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் சரணப்பா, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

அதாவது 3 குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவியை சரணப்பா கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சரணப்பாவின் சித்ரவதை அதிகமானதால் அவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு 3 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சரணப்பாவும், அவரை அழைத்து வராமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சரணப்பா, மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அவரையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சரணப்பா தகராறில் ஈடுபட்டார். அப்போதும் 3 குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றும், யாருக்கு பிறந்தது என கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். பின்னர் இரவில் அனைவரும் தூங்கி விட்டனர்.

நேற்று காலையில் எழுந்து சரணப்பாவின் மனைவி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். 3 குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் சரணப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை அறிந்த சரணப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சான்வியும், பார்கவும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். ஹேமந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த சரணப்பாவின் மனைவி வீட்டுக்கு வந்தார். அப்போது 2 குழந்தைகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஹேமந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஹேமந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவனது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து யாதகிரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்