உலக அழகி போட்டி: 1,770 வைரங்கள், 18-காரட் வெள்ளை தங்கம் அலங்கரித்த கிரீடம், பரிசு தொகை விவரம்

கிரீடத்தில், அமைதி, புரிதல் மற்றும் விசுவாசம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில், நீல கற்களும் இடம் பெற்றிருக்கும்.;

Update:2025-05-31 19:50 IST

ஐதராபாத்,

72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. கடந்த ஆண்டும் உலக அழகி போட்டி இந்தியாவிலேயே நடந்தது. மும்பையில் நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்றில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்று, 71-வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றார்.

அவர் நடப்பு போட்டியில் வெற்றி பெறும் புதிய மிஸ் வேர்ல்டு போட்டியாளருக்கு கிரீடம் அணிவிப்பார். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், 72-வது உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று ஐதராபாத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டுள்ளனர்.

அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் 14 பேர் கால் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தனித்திறன் போட்டியில் இந்தோனேசிய அழகி மோனிகா கேசியாவும், நடனப்போட்டியில் இந்திய அழகி நந்தினி குப்தாவும் முதலிடம் பெற்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அணிவிக்கப்படும் கிரீடம், பரிசு தொகை விவரங்கள் வெளிவந்துள்ளன. கிரீடத்தில் 1,770 ஜொலிக்கும் வைரங்கள் இருக்கும். இவை 175.49 காரட் எடை கொண்டிருக்கும். அவற்றுடன் ரூ.3 கோடி மதிப்பிலான 18-காரட் வெள்ளை தங்கமும் இருக்கும்.

கிரீடத்தில், அமைதி, புரிதல் மற்றும் விசுவாசம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில், நீல கற்களும் இடம் பெற்றிருக்கும். இதுதவிர, வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.1.15 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். இது கடந்த ஆண்டு வழங்கிய பரிசு தொகையை விட கூடுதலாகும். போட்டியின் முடிவு நள்ளிரவு 1 மணியளவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்