காதலனுக்கு பிடிக்காததால் 3 வயது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தாய்
பிரியாவின் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை என்பதால், அந்த குழந்தையை லிவ்-இன் காதலர் அல்கேஷ் வெறுத்து ஒதுக்கியுள்ளார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கான்ஸ்டபிள் கோவிந்த் சர்மா என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆணும், பெண்ணும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை நிறுத்தி விசாரித்தார். அந்த பெண், தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சோதனை செய்தனர். இதற்கிடையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவருடன் இருந்த ஆணின் பெயர் அல்கேஷ் என்பதும், இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தனது கணவரை விட்டு பிரிந்து அஜ்மீரில் தனியாக வசித்து வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த பிரியாவுக்கு, அதே ஓட்டலில் வேலை செய்து வரும் அல்கேஷுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரியா தனது 3 வயது பெண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஆனா சாகர் ஏரி அருகே நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. பின்னர் சுமார் 1.30 மணியளவில் அவர் மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கையில் குழந்தை இல்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அடுத்த நாள் காலை குழந்தையின் இறந்த உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் குழந்தையை ஏரியில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரியாவின் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை என்பதால், அந்த குழந்தையை லிவ்-இன் காதலர் அல்கேஷ் வெறுத்து ஒதுக்கியுள்ளார்.
தனது காதலருக்கு பிடிக்கவில்லை என்பதால், தன்னுடைய குழந்தையை தானே கொலை செய்துவிட பிரியா முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு உணவு கொடுத்து தூங்க வைத்த பிரியா, அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஏரிக்கு சென்று, குழந்தையை தண்ணீரில் வீசியுள்ளார். பின்னர் அல்கேஷை தொடர்பு கொண்டு குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த அல்கேஷ், பிரியாவுடன் சேர்ந்து குழந்தையை தேடி அலைந்துள்ளார். அப்போது தான் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். பிரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், இந்த கொலையில் பிரியாவின் காதலருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.