நடுரோட்டில் மெத்தை போட்டு படுத்திருந்த மர்மநபர் - வைரல் வீடியோ
மர்மநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.;
பெங்களூரு,
பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மர்மநபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் மெத்தை போட்டு, அதன் மீது மல்லாக்கப்படுத்தப்படி கால்மேல் கால் போட்டு இருந்தார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த நபர் படுத்திருந்த பகுதியை சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும் அந்த நபர் மெத்தை மீது ஹாயாக படுத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் எழுந்து சென்றார்.
நடுரோட்டில் மெத்தை போட்டு மர்மநபர் படுத்திருந்ததை யாரோ ஒரு வாகன ஓட்டி அதனை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த நபருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீசார், இந்த வீடியோ பற்றி நாங்களும் பார்த்தோம். அந்த வீடியோவில் உள்ள நபர் பற்றி விசாரித்து வருகிறோம். அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.