பஹல்காமில் கேபிள் கார் திட்டம்-என்.ஐ.ஏ ஒப்புதல்
காஷ்மீரின் பஹல்காமில் கேபிள் கார் திட்டத்துக்கு என்.ஐ.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.;
ஸ்ரீநகர்,
பஹல்காம் சுற்றுலா பகுதியில் கேபிள் கார் திட்டம் தொடங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு திட்டமிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி பஹல்காமின் சுற்றுலா தலமான பைசரனில் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் இந்த திட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் எம்.எல்.ஏ. அல்தாப் அகமது வானி எழுப்பிய கேள்விக்கு சுற்றுலா துறையை வைத்திருக்கும் முதல்-மந்திரி உமர் அப்துல்லா அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:-மாநில அரசு திட்ட பணிகள் ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிந்தைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது தொடங்கப்படவில்லை. 1.4 கி.மீ. தூர கேபிள் கார் திட்டத்துக்கான சீரமைப்பு காஷ்மீர் கேபிள் கார் கார்ப்பரேஷன் மூலம் அமைக்கப்படும். கேபிள் கார் பஹல்காமில் உள்ள யாத்ரி நிவாஸ் அருகே தொடங்கி பைசரனில் முடிவடையும். இந்த திட்டத்துக்கு தேவையான 9.13 ஹெக்டேர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது.
டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த நிறுவனத்துக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பஹல்காமில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பிந்தைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தால் அதன் பணியை செய்ய முடியவில்லை. இந்த திட்டத்துக்கு ₹120 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ.விடம் (தேசிய புலானாய்வு பிரிவு) கேபிள் கேபிள் கார் திட்டத்தை தொடங்குவது குறித்து காஷ்மீர் அரசு கருத்து கேட்டது. இதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.